-கிண்ணியா நிபர்-
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் கிளீன் ஶ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட தேசிய உற்பத்தி திறன் விருதுகள் 2025 /2026 ஆம் ஆண்டுக்கான போட்டிகளுக்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் என்.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் ஏற்பாட்டில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் சிரேஷ்ட உற்பத்தித்திறன் உத்தியோகத்தர் ரோஹன் குணவர்தன அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
அம் மாவட்ட இணைப்பாளர் உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. நுஸ்ரி அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.
இதன்போது தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் தொடர்பாக சிறப்பு காணொளியும் காண்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. அரசபிரிவிற்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்திலும்,
பாடசாலை பிரிவிற்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வானது மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்திலும், உற்பத்தி மற்றும் சேவைகள் பிரிவிற்கான அளவு கோல்களை தெளிவுபடுத்தும் நிகழ்வானது மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்திலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அரச பிரிவிற்கான அளவுகோல்களை சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இஷான் ரத்னகமல் அவர்களும், பாடசாலை பிரிவிற்கான அளவுகோல்களை சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். புவனேந்திரன் அவர்களும், உற்பத்தி மற்றும் சேவைகள் பிரிவிற்கான அளவுகோல்களை தமிழ் மொழி மூலமாக சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். புவனேந்திரன் அவர்களும், சிங்கள மொழி மூலமாக சிரேஷ்ட உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் இஷான் ரத்னகமல் அவர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு போதியளவிலான விளக்கங்களை இதன்போது வழங்கி வைத்தனர்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


