-கிண்ணியா நிருபர்-
பலவந்தமாக மக்களை வெளியேற்றி காணிகளை அபகரித்துக் கொடுத்தால் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக மக்களோடு சேர்ந்து போராட்டம் செய்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட மத்திய குழு கூட்டம் இன்று சனிக்கிழமை கிண்ணியா உப்பாறு தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர், ‘திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்தியாவுக்கு சில பகுதிகள் வழங்கப்பட உள்ளன இதனால் இப்பிரதேசத்தில் உள்ள பலர் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் இது சம்பந்தமாக உங்கள் நிலைப்பாடு என்ன ‘என கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்துரைத்த றிசாத் பதியுதீன்,
இருக்கிற மக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் அதை அனுமதிக்க முடியாது அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால் இந்த வீட்டை விட அழகான வசதி உள்ள வீடுகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
தற்போது இருக்கின்ற தொழில் வாய்ப்புகளை விடவும் மிகவும் அழகான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியும். அப்படி ஒரு நஷ்ட ஈடுகளை கொடுத்து செய்வது பரவாயில்லை.
அப்படி இல்லாமல் பலவந்தமாக மக்களை வெளியேற்றி காணிகளை அபகரித்துக் கொடுத்தால் அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் அதற்கு எதிராக மக்களோடு சேர்ந்து போராட்டம் செய்வோம் என அவர் தெரிவித்தார்.
அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையின் கீழ் இடம் பெற்ற மாவட்ட மத்திய குழு கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ். எஸ்.அமீர் அலி, அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஹில்மி முகைதீன் பாவா, திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.