வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த தரப்பினருக்கான காப்புறுதி கொடுப்பனவை நிறுத்த வேண்டிய தேவைப்பாடு தொடர்ந்தும் இல்லையென கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய புதன்கிழமை நேற்று அறிவித்துள்ளார்.
அத்துடன் நட்டயீட்டை பெற்றுக் கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து எந்தவித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் தரப்பினருக்கு காப்புறுதி நட்டயீடு வழங்கப்படுவதை ஒரு வார காலத்திற்கு கைவிடுவதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிஸ் அண்மைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை கோரியிருந்தது.
ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பொரளை பொது மயானத்துக்கு அருகில் தமது மகிழுந்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.