தற்போது வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் இரண்டு காற்றுச் சுழற்சிகள் உருவாகியுள்ளன. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சியானது எதிர்வரும் 16 திகதியளவில் தாழமுக்கமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றுச் சுழற்சி இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு அண்மித்திருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் மேக மூட்டத்துடன் காணப்படும் என்பதோடு அடுத்த சில நாட்களுக்கு பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
2023-2024 க்கான வடகீழ் பருவமழை இந்த தாழமுக்க நிகழ்வுகளோடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் குறிப்பாக வடக்கு மாகாணத்தின் இரண்டு திசை கடற்பரப்புக்களிலும் ஒரே நேரத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளமை ஒரு அசாதாரண நிகழ்வாகும். இந்த இரண்டு தாழமுக்கங்களாலும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மேற்கு பகுதிகள் கன மழையைப் பெறும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சில வேளைகளில் இந்த இரண்டு தாழமுக்கங்களினாலும் எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காவிட்டால் இவ்வாண்டுக்கான வடகீழ் பருவ மழை தொடங்குவதற்கு தாமதமாகலாம். ஏனெனில் பருவ மழை கிடைப்பதற்கான ஈரப்பதன் முழுவதையும் இவை உள்ளெடுத்து விடும் என்பதனால் இந்த தாழமுக்கங்களுக்கு பின்னர் மழை கிடைப்பதற்கு குறைந்தது ஒரு வாரமாவது எடுக்கும்.