தலதா மாளிகை யாத்திரைக்காலம் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி கண்டி நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, காவல்துறை மற்றும் ஏனைய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டவர்களை பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்டி நகரிற்குள் இன்று முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வெளி மாவட்டங்களிலிருந்து பிரவேசிக்கும் வாகனங்களுக்கும், அன்றாட நடவடிக்கைகளுக்காகக் கண்டி நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கும் தனித்தனியான வாகன தரிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
யாத்திரிகர்களின் நலன் கருதி குறித்த வாகன தரிப்பிடங்களில் இருந்து தலதா மாளிகைக்குச் சலுகைக் கட்டணத்தில் விசேட பேருந்து சேவையினை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கண்டி, வத்தேகம மற்றும் தேனுவர ஆகிய கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட 50 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கண்டி கல்வி வலயத்திற்குட்பட்ட 45 பாடசாலைகளுக்கும் வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளுக்கும் தேனுவர கல்வி வலயத்திற்குட்பட்ட 2 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










