-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து, வடமராட்சி கிழக்கு தனியார் போக்குவரத்து பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நேற்று புதன்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலையில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார் என்பவர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த பேருந்து சாரதியை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாள்வெட்டை நடத்தியவர்கள் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.