காதலியை பார்ப்பதற்காக பிலியந்தலை பஸ் டிப்போவில் பஸ்ஸை திருடிய சிறுவன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மத்தேகொட, சித்தமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பஸ் டிப்போவில் சேவையாற்றும் பஸ் சாரதிகள் குழுவொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஆசிய கிண்ண 2022 இறுதிப்போட்டியை காண டிப்போவிற்கு வந்திருந்தனர்.
பஸ் டிப்போவில் பஸ்களை நிறுத்திவிட்டுஇ உணவு வாங்கவும், கிரிக்கெட் போட்டியை வேறு இடத்தில் பார்க்கவும் குறித்த சாரதி குழுவினர் புறப்பட்டனர்.
திரும்பி வந்து பார்த்த போது, தனது பஸ் காணாமல் போனதை உணர்ந்த சாரதி ஒருவர், பிலியந்தலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
விசாரணைகளை ஆரம்பித்த போது, கெஸ்பேவ – பிலியந்தலை சந்திக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் பஸ்ஸை அவதானித்து நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் வாகனத்தை கைவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையின் போது, தனது காதலியை பார்த்துவிட்டு திரும்பும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக குறித்த சிறுவன் தெரிவித்தார்.
நேற்று இரவு 08 மணிக்குப் பிறகு தனது காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய சிறுவன், பேருந்து நிலையத்திற்கு வந்தபோது பேருந்துகள் இயங்கவில்லை என்றும்,
அதனைத் தொடர்ந்து, டிப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து பஸ்களையும் கவனமாக பரிசோதித்த அவர், தனது காதலியை பார்ப்பதற்காக ஒரு பஸ்ஸை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இதற்கு முன்னரும் தனது காதலியைப் பார்ப்பதற்காக பேருந்தொன்றை திருடியதாகவும், ஹோமாகமவிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.