பேருவளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அளுத்கம, மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த வர்த்தகர், நெஞ்சுவலியால் சுகவீனமுற்றிருந்த தனது தந்தையை நேற்று திங்கட்கிழமை காரில் பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து வந்து தந்தைக்கு கடுமையான சுகயீனம் இருப்பதாகவும், அதனால் காருக்குள் வந்து பரிசோதனை செய்யுமாறு கோரியதாகவும், அதனை வைத்தியர் மறுத்ததையடுத்து, ஆத்திரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான வைத்தியரின் கையில் காயம் ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.