இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் எட்டரைக் கோடி ரூபா பெறுமதியான 4 கிலோ 611 கிராம் தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றியுள்ளதுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் தங்கத்தைக் கொண்டுவர முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு வருவதைக் கருத்தில் கொண்டு அவரது பயணப் பொதிகளை பரிசோதித்தபோது சுங்க அதிகாரிகளால் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதல் சோதனையில் அதனைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவற்றின் மீது கறுப்புப்பூச்சு பூசப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் சந்தேக நபர் கடந்த 3 ஆம் திகதி காலை 6.45 மணிக்கு பாரிஸிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சந்தேக நபரான பிரான்ஸ் நாட்டவர் தண்டப்பணத்தை செலுத்த தவறிய நிலையில், சுங்க அதிகாரிகளால் நீர்கொழும்பு பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.











