டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த வீட்டுக்கு வீடு பரிசோதனை ஆரம்பம்

-கல்முனை நிருபர்-

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவுப் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ சி.எம் பஸாலின் அறிவுறுத்தலிலும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.எம்.நியாஸ் தலைமையில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நுளம்புகள் ஆய்வின் போது நுளம்புகளின் செறிவு அதிகமாகக் காணப்படுவதால், தங்களது வீட்டைச்சுற்றிலும் சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வீடு வீடாகச்சென்று பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தலைமையிலான குழுவினர் பரிசோதனையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதன் போது நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்கள் கண்டுபிடிக்கப்படுமாயின், சம்பந்தப்பட்டவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதாரத்துறை அறிவித்துள்ளதுடன் தங்களது வீட்டையும் அதனைச்சூழவுள்ள இடங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு மக்களை பணித்துள்ளனர்.

மேலும், எதிர்வரும் மழைக்காலங்களில் நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கும் என்பதுடன், நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த தங்கள் வீடுகள் வளைவுகளைச் சுத்தம் செய்வதோடு, தங்கள் வீடுகளில் காணப்படும் நுளம்புகள் பெருவதற்கு ஏதுவான பொருட்கள் அழிக்குமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் தலைமையிலான பணியாளர் குழு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.