நாமல் ராஜபக்சவுக்கு மக்களின் ஆதரவும் கட்சியின் ஆதரவும் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ருமேனியாவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிளையின் சில அதிகாரிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் இன்று உலகில் பெரும்பான்மையானவர்கள் இளம் தலைவர்களாக உள்ளனர். அதனால் கட்சித் தலைவராகும் தகுதி நாமல் ராஜபக்சவுக்கும் உண்டு. மக்களின் ஆதரவும் கட்சியின் ஆதரவும் நாமல் ராஜபக்ஷவுக்கு இருப்பதால் அவர் நாட்டின் தலைவராக வருவதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க வேண்டுமென அக்கட்சியின் சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டு வருவதுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்க வேண்டுமென்ற கருத்தும் கட்சிக்குள் வலுவடைந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.