சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் மாஸ்கோ காலமானார்

சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் மாஸ்கோ வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மிக்கைல் கோர்பசேவ் தனது 91 ஆவது வயதில் காலமானார்.

சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவராகவும், சோவியத் ஒன்றியத்தின் பல தீர்க்கமான மாற்றங்களை ஏற்படுத்திய தலைவராகவும் இருந்தவர்.

அவரது ஆட்சி சோவியத் ஒன்றியத்தின் மிக முக்கியமான காலகட்டம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவைப் பிரித்து கட்டப்பட்ட பெர்லின் சுவரால் மூடப்பட்ட ஜெர்மனியின் மறு இணைப்பு அவரது ஆட்சியில் நடந்தது.

மேலும், உலக வரலாற்றில் மிக மோசமான அணு உலை விபத்து, செர்னோபில் அணுமின் நிலையம் இவரது ஆட்சிக் காலத்தில் வெடித்தது.

அந்த வெடிப்பு சோவியத் ஒன்றியத்தின் முடிவையும் அடையாளம் காட்டியது மற்றும் அவர் சோவியத் ஒன்றியத்தினை மேற்கு நாடுகளுக்குத் திறந்த தலைவர்.

கிரெம்ளின் கட்டுப்பாட்டில் இருந்த சோவியத் ஒன்றியத்தினை புதிய ரஷ்யாவாக மாற்ற வழிவகுத்த சீர்திருத்த முறையை அறிமுகப்படுத்திய தலைவர் கோர்பச்சேவ் ஆவார்.

அப்போது நிலவிய பனிப்போரை சமாதானமான முறையில் நிறைவு செய்தமைக்காக கோர்பச்சேவ் 1990 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடுகள் பிரிந்து செல்லும் உரிமையையும் கோர்பசேவ் அனுமதித்தார்.

இதன் விளைவாக 1991 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் என்ற கட்டமைப்பு கலைந்து அதில் இடம்பெற்றிருந்த உக்ரைன், லிதுவேனியா உள்ளிட்ட 15 நாடுகள் சுதந்திர நாடுகளாகியமை குறிப்பிடத்தக்கது.