சேவைக்கு திரும்பும் பலாலி விமான நிலையம்

2022 இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டுக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தந்த காங்கேசன்துறை துறைமுகம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அழிவடைந்து தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

இவ்வாறான சம்பவங்கள் மூலமே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் துறைமுகத்தின் பணிகளை மேம்படுத்த இந்தியாவின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பலாலி சர்வதேச விமான நிலையமும் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும்.

அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.