சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார,சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் .
இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ‘Hotel Show Colombo 2025’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் அமைச்சர்இதனை குறிப்பிட்டார் .
மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் திங்கட்கிழமை (28) மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
‘Hotel Show Colombo 2025’ கண்காட்சி இன்று காலை கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமானது .
“கடந்த காலத்தில், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணமின்றி இலங்கைக்கு வரும் வாய்ப்பை வழங்கினோம். இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத்தெரிவித்தார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணமின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்படுவர்என்றும் இந்தத் தீர்மானத்தால், அரசு திறைசேரி ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும்என்றும் இந்த நேரடி வருவாய் இழப்பு இருந்தாலும், சுற்றுலாத் துறையின் அபிவிருத்தியின் மூலம் மறைமுகமாக நாட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என தாங்கள் நம்புகிறோம்என்றும் எனவே, இந்த வருமானத்தை அதிகரிக்கும் பொறுப்பு, சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களிடம் உள்ளது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார் .
