இந்தியாவில் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை உண்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மயூர்பஞ்ச் மாவட்டம் தந்துனி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங் (வயது – 58) மற்றும் நரேந்திர சிங் (வயது – 25) ஆகியோர் குடிபோதையில் சடலத்தை உண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை காலை பி.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்த மதுஸ்மிதா சிங் (வயது – 25) என்ற இளம் பெண்ணின் உடல் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. சடலம் எரியூட்டப்பட்ட சில நிமிடங்களில் நரேந்திர சிங் மற்றும் மோகன் சிங் சடலத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அதிர்ச்சியடைந்த இறந்த மதுஸ்மிதாவின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் மோகன் மற்றும் நரேந்திரனை பிடித்து சரமாரியாக தாக்கி பின்னர் இருவரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்துவிட்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர், இறந்த இளம் பெண் மதுஸ்மிதாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தபொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இருவரிடமும் விசாரணை நடத்தியதில் திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொள்வது தங்களுக்கு சக்தியைத் தரும் என்றும் அதனால் சடலத்தை சாப்பிட்டதாகவும் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் கூறினர். போதையில் இருவரும் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.