தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 7 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது கைது செய்யப்பட்ட 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரமற்ற இம்யூனோகுளோபுலின்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் சீதுவையில் உள்ள நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மற்றும் ஆய்வகம் ஆகியன கடந்த 08 திகதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் குறித்த பரிசோதனை இடம்பெற்றது.
குற்றப்புலனாய்வு திணைக்களம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களால் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்ட 13 பேருக்கு ஏற்கனவே நீதிமன்றினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது