நாரம்மல பகுதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்குள்ளாகி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட லொறியின் சாரதி சிவில் உடையில் இருந்த அதிகாரி ஒருவரால் சுடப்பட்டதாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிவில் உடையில் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் லொறியைத் துரத்திச் சென்றதாகவும் சாரதி லொறியை நிறுத்தியவுடன் ஒரு நபர் துப்பாக்கியை சுடுவதற்கு தயாராக கொண்டு சென்றதாகவும் பின்னர் அவர் லொறியின் சாரதியை சுட்டதாகவும் குறித்த சாட்சி தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் முச்சக்கர வண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த சாட்சி ‘உயிரிழந்தவர் தச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் எனவும் அவர் ஒரு அப்பாவி’ என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொரு நபர் லொறியின் சாரதியை சுட்டுக்கொன்ற உப பொலிஸ் பரிசோதகர் சாரதியை நெருங்கும் போதே துப்பாக்கியை சுட தயாராக கொண்டு சென்றதை தான் அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் நாரம்மல பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து நாரம்மல தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் பதற்றமான சூழல் நிலவியது.
இதன்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா, சோதனைக்காக வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் தெரிவித்த போது குறித்த சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் தான் அவர் சுடப்பட்டார், என தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை 06.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் நாரம்மல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 59 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் திணைக்களத்தின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக உள்ளக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த அதிகாரி சிவில் உடையில் வாகனத்தை சோதனை செய்ய முயன்றதுடன் துரத்திச் சென்று துப்பாக்கி கூட்டை மேற்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.