-பதுளை நிருபர்-
பதுளை தல்தென பகுதியில் அமைந்துள்ள சிறுவர் புனர்வாழ்வு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெட்டகொட – புஸ்ஸலாவ தல்தென – பதுளை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 1430 மில்லி கிராம், ஹேஸ் போதைப்பொருள் 570 மில்லி கிராம், ஹெரோயின் போதைப்பொருள் 130 மில்லி கிராம், 10 போதை மாத்திரைகள் மற்றும் 19 மில்லி கிராம் புகையிலை ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கிரேன்ட் பாஸ் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் தகப்பனார் தன்னிடம் குறித்த போதைப்பொருட்களை கொடுத்ததாகவும் கைதிகள் வேலை நிமித்தம் வெளியே வரும் போது அவர்களிடம் சூட்சுமமான முறையில் கொடுப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் பதுளை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.