இந்தியாவில் ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை என்ற பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை தந்தை அடித்து கொன்றுள்ளார்.
ராய்ஹை என்ற பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று கட்டட வேலைகள் நடந்தது. அங்கு 35 வயதுடைய நபர் ஒருவர் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக வேலை செய்துள்ளார். அந்த நபர் வேலை நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டுக்கட்டையைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலின்போது அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.