சர்ப்ரைஸ் என்று சொல்லி “அவள் கண்களை மூடச் சொல்லி கத்தியால் கழுத்தை அறுத்தேன்” திடுக்கிடும் வாக்குமூலம்

-ச.சந்திரபிரகாஷ்-

கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கடந்த செவ்வாய்கிழமை பட்டப்பகலில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் உள்ள அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அவளை கொலை செய்யும் நோக்கில் செவ்வாய்க்கிழமை மூன்று இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார். கொலையை செய்வதற்கு அந்த இடங்கள் பாதுகாப்பானவை அல்ல என்று உணர்ந்த அவர்,  அவளை ரேஸ் கோர்ஸுக்கு அழைத்துச் சென்றதாக,   இதுதொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாரிடம் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் பலதிடுக்கிடும் தகவல்களை வழங்கியுள்ளார்.

“சுட்டி என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருட இளங்கலை பட்டதாரியான சத்துரி ஹன்சிகா மல்லகராச்சி (வயது-24) என்பவரே கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் அளவில் கொழும்பு 7லில் உள்ள குதிரை பந்தைய திடல் மைதானத்தின் படிக்கட்டில் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது யாவரும் அறிந்த விடயமாகும்.

ஹோமாகம கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சத்துரி  குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் அவருக்கு பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு தங்கை உள்ளார். நுகேகொடை அனுலா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சத்துரி, உயர்தரப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அவர் கல்வி சார்ந்த யூடியூப் சேனலை நிர்வகிப்பதாக அவரது பல்கலைக்கழக நண்பர்கள் தெரிவித்தனர்.

இந்த மாணவியின் கொலை தொடர்பாக கைதான கொழும்பு பல்கலைக்கழகத்தில் 3 ஆம் வருடத்தில் அதே பிரிவில் கல்வி கற்கும் வெல்லம்பிட்டிய சித்தம்பஹுவ பகுதியைச் சேர்ந்த   சந்தேக நபர்  பசிது சதுரங்க (வயது-24) என்பவரே திடுக்கிடும் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

கொலைக்கான காரணம் என்ன ?  வாக்கு மூலத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான்  2019 முதல்  எனது மனநோய்க்கு மருந்து எடுத்து வருகிறேன்.   2020 ஆம் ஆண்டு முதல் சுட்டியுடன் ஒரு காதல் உறவைத் தொடங்கினேன்.  நான் மருந்து எடுத்துக்கொள்கின்றேன் என்று அவளிடம் ஆரம்பத்தில் சொல்லவில்லை. ஆனால் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கு அது தெரியவந்தது.

பின்னர் அவள் எங்கள் உறவை நிறுத்த விரும்பினாள், அவள் அதை செய்தாள். இதன் பின்னர் அவள் முற்றிலும் மாறிவிட்டாள். அவள் தொடர்ந்து என்னை காணும் போதெல்லாம் பிஸ்ஸா  (பைத்தியம் ) என்று அழைத்தாள்.  வேறொரு உறவின் காரணமாக அவள் மாறிவிட்டாளா என்ற சந்தேகத்தில் இதை பார்த்தேன். ஆனால் அவளுக்கு அத்தகைய தொடர்பு எதுவும் இல்லை.

அவள் எப்போதும் என்னை பிஸ்ஸா என்று அழைப்பதால் நான் மனவலியில் இருந்தேன். இருந்தும் அவள் வேறு ஒருத்தனின் காதலியாக போவதை நான் விரும்பவில்லை.

எனக்கு மனநோய் இருப்பதாக எப்போதும்  சுட்டி குற்றம் சாட்டினார். அதனால்தான் எனக்கு மனவலி ஏற்பட்டது. ஒரு மாதமாக அவளைக் கொல்ல திட்டமிட்டிருந்தேன். எதிர்காலத்தில் அவள் வேறொருவருடன் தொடர்பு வைத்திருப்பதையும் நான் என் கண்களால் பார்க்க விரும்பவில்லை.

இதையடுத்து கடந்த 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெல்லம்பிட்டி சந்தியில் இருந்து கத்தி ஒன்றை வாங்கி செவ்வாய்கிழமை அந்த கத்தியை என் பையில் எடுத்து வைத்துக் கொண்டேன் , காலையில் முதல் விரிவுரையில் கலந்து கொண்ட பின்னர், நான் ஒரு முக்கிய விடயம் சொல்ல வேண்டும் என்று தெரிவித்து சுட்டியை ரேஸ்கோர்சுக்கு வரச் சொன்னேன்.

முதலில் அவள் எனது அழைப்பை மறுத்துவிட்டாள், நான் அவளை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் அவள் ஒப்புக்கொண்டாள். இருவரும் ரேஸ் கோர்ஸ் மைதானம் நோக்கி நடந்தோம்.

நடந்து கதைத்து வரும் போதே எனக்கு அவள் மீது தீராத கோபம் இருந்தது நான் மீண்டும் அவளிடம் உனக்காக ஒரு ஆச்சரியம் இருப்பதாகச் சொன்னேன்.

ரேஸ் கோர்ஸ் மைதானத்தை அடைந்ததும் அங்கே வைத்து நான் அவளுக்கு ஒரு “ சர்ப்ரைஸ் இருக்கிறது என்று சொல்லி அவள் கண்களை துணியால் கட்டினேன் என்ன ஆச்சரியம் என்று மீண்டும் கேட்டாள். பின்னர் கத்தியால் அவள் கழுத்தை அறுத்துக் கொண்டு இதுதான் சர்ப்ரைஸ் என்றேன்.”

கழுத்தறுபட்ட வேதனையில் அவள் அலறிக் கொண்டு, தன் கண்களை மூடியிருந்த துணியைக் கழற்றிவிட்டு உதவிக்காக அலறினாள். நான் அவளை மீண்டும் குத்தினேன். அருகில் இளம் பெண்கள் கூட்டம் இருந்தது,  அவர்கள் அந்த இடத்திற்கு வருவார்கள் என்று பயந்து, நான் அங்கிருந்து தப்பி ஓடினேன்.

இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து ஓடி பேருந்தில் ஏறி ரயிலுக்கு முன் பாய வேண்டும் என்று நினைத்து வெல்லம்பிட்டிக்கு சென்றேன். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் ரயில் வரவில்லை. பின்னர் வீட்டிற்குச் சென்று எனது பைகள் மற்றும் இதர பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு இரண்டு முறை களனி ஆற்றில் தற்கொலை செய்து கொள்ள குதித்தேன் இதன் போதும் மரணம் என்னை அழைக்கவில்லை.

எனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்தன, அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு வீதியால் வரும் போதே உங்களிடம் பிடிபட்டேன் என பொலிஸ் காவலில் உள்ள சதுரங்க வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.