அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, 8 கிராமுக்கு மேற்பட்ட போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு இவ்விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கைது நடவடிக்கையின் போது முதலாவது சந்தேகநபரான விளினியடி – 08 பிரிவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரிடமிருந்து 6 கிராம் 074 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சந்தேகநபரான செந்நெல் கிராமம் – 02 பிரிவைச் சேர்ந்த 27 வயதுடைய நபரிடமிருந்து 2 கிராம் 158 மில்லிகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்வசம் போதைப்பொருள் வைத்திருந்தமை குறித்தும், இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களா அல்லது தனிப்பட்ட பாவனைக்காக வைத்திருந்தார்களா என்பது தொடர்பிலும் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










