-சம்மாந்துறை நிருபர்-
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முஹர்ரம் தின பரிசளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பான முறையில் கல்வி கற்று மத்ரஸாவில் இடம்பெறும் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மத்ரஸா மாணவர்கள் இதன்போது சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, விளையாட்டில் திறமையை வெளிக்காட்டிய மத்ரஸா மாணவர்களுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இம்மாணவர்களைப் பயிற்றுவித்த உஸ்தாத்மார்களுக்கு இதன்போது அன்பளிப்புகள் வழங்கி, பாராட்டி சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் அதிதிகள் புடை சூழ மத்ரஸா சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்திற்குள் அல்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்த சம்மாந்துறையைச் சேர்ந்த சிறிய மத்ரஸா மாணவனொருவர் அவர் குறுகிய காலமான ஒரு வருடத்திற்குள் அல்குர்ஆன் முழுவதும் மனப்பாடம் செய்தமைக்காக அவரை உம்ராக் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை குறித்த மத்ரஸா நிர்வாகிகள் பெற்றுக் கொடுத்திருப்பதும் நிகழ்வின் விசேட அம்சமாகும்.


