-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு கிரான் கிராமத்தின் வரலாற்றில் முதற் சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட சட்டத்தரணி குமாரவேல் புருஷோத்தமனை பாராட்டி கௌரவிப்பு வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை மாலை கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
கிரான் மத்திய கல்லூரியின் 1999,2000 ஆம் ஆண்டு பிரிவு மாணவர்களினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டத. இதன்போது கௌரவ அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி, நிகழ்வில் சர்வமத வழிபாட்டுடன் சர்வமத குருமார்களினால் இறை ஆசி வழங்கப்பட்டது இதன் போதுமாணவர்களின் நடன நிகழ்வு இடம் பெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ அதிதிகள் சட்டத்தரணி குமாரவேல் புருஷோத்மன் அவர்களின் கடந்த கால சமூக செயற்பாடு மற்றும் எதிர்காலத்தில் அவர் எவ்வாறு மக்கள் பணியை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவரது சாதனை தொடர்பாக வாழ்த்துரைகளும் நிகழ்த்தப்பட்டது.
அவரை பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புக்கள்,நண்பர்கள்,அரச உயரதிகாரிகளினால் பொன்னாடை போர்த்தியும், வாழ்த்து மடல் வாசித்தும், நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.இவர் கிரான் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பெற்ற ஒவியரான ஒவியதர்மா குமாரவேல் அவர்களின் மகனாவார்.
மேலும் அண்மையில் நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, ஆலய குரு சிவஸ்ரீ மு.சண்முகம் குருக்கள், கிரான் முன்னாள்,இந்நாள் அதிபர்கள்.ஆசிரியர்கள் மற்றும் சட்டத்தரணியின் குடும்ப உறவுகள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

