-யாழ் நிருபர்-
யாழில் நேற்றைய தினம் வியாழக்கிழமை வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, தள்ளி விட்டு சங்கிலியை அபகரித்தவர்களை இளம்தாய் விரட்டி அடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
முன்பள்ளியில் இருந்து மகளை ஏற்றிக்கொண்டு கொயிலாமனை, அண்ணமார் கோவிலடியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளம் தாயை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர், நபர் ஒருவரின் பெயரைச் சொல்லி வினாவியுள்ளனர். அவரை எனக்குத் தெரியாது என்று கூறி விட்டு குறித்த இளம் தாய் பயணிக்க எத்தனித்தபோது மோட்டார்சைக்கிளுடன் தள்ளி கீழே வீழ்த்திவிட்டு அவரின் கழுத்தில் அணிந்திருந்த முக்கால் பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.
உடன் சுதாகரித்துக் கொண்ட அந்த இளம்தாய், உடனேயே எழுந்து, மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டவாறே துரத்திச் சென்றுள்ளார். இதையடுத்து வீதியால் பயணித்தவர்கள் திருடர்களை மடக்கிப் பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் மோட்டார்சைக்கிளைக் கைவிட்டுவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார்சைக்கிளும் சுன்னாகம் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










