புத்தளம் பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.
இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அனுர மங்கள் குமார (வயது – 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு பின்னர் டீமோ பட்டா லொறியையும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டீமோ பட்டாவில் சென்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.