கோதுமை மாவின் விலை குறைவடையும்

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் முன்பதிவு செய்யப்பட்ட கோதுமை, எதிர்வரும் 10 நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதால்,  கோதுமை மாவின் விலை குறைவடையும், என அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களும், கோதுமை மா இறக்குமதியை கட்டுப்படுத்தியதுடன், இந்தியா கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்தது.

அதனைத்தொடர்ந்து,  நாட்டில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 400 ரூபாவை கடந்தது.

இதனால் வெதுப்பக உற்பத்திகளை முன்னெடுப்பதற்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டது.

அதன் விளைவாக வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பதற்கு வெதுப்பக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலைமையை கருத்திற் கொண்டு துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்ய அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.