கொழும்பில் 9 பல்கலைக்கழக மாணவர்கள் கைது -சுகாதார அமைச்சகத்தின் முன் சட்டவிரோத போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர், உட்பட குறைந்தது ஒன்பது பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் அளவில் பொலிசாரினரால் கைது செய்யப்படடுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுஷான் சந்திரதித் உட்பட போராட்டக்காரர்கள் குழுவை மருதானை பொலிசார் கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்ட பேரணியை இணை சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்தநிலையில் இன்று மதியம் 12.00 மணி முதல் நாளை மாலை 5.00 மணி வரை போராட்டக்காரர்கள் குழு கொழும்பில் உள்ள மருத்துவமனை சதுக்கத்திற்குள் நுழைவதையும், மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்கும் உத்தரவை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று காலை பிறப்பித்தது.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.