சர்ச்சைக்குரிய கட்டடம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

-நுவரெலியா நிருபர்-

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட சட்டவிரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய பத்தனை தொடர் கடைத் தொகுதி தொடர்பான முறைப்பாடு, தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரிடம் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து, இது தொடர்பான சட்ட ரீதியான ஆவணங்களை கொட்டகலை பிரதேச தலைவர் ராஜமணி பிரசாந்த் அவர்களை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆராயும் பொழுது சர்ச்சைக்குரிய இக்கட்டடமானது அரச அனுமதி எதுவும் இன்றி முறைக்கேடாக கட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

இம்மாதம் 8ம் திகதி சௌமியபவானில் இடம்பெற உள்ள ஒழுக்காற்று விசாரணைக்கு கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் மற்றும் முன்னாள் உப தலைவர் சுரேஷ் குமார் ஆகியோரை சமூகமளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இ.தொ.கா பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட விரோதமாக கட்டப்பட்ட சர்ச்சைக்குரிய இக்கட்டடத்தை மாவட்ட செயலாளர் ஊடாக அரச உடைமை ஆக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.