-யாழ் நிருபர்-
யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி கிராமத்தில் கடந்த புதன்கிழமை இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் மூவரை நேற்று வெள்ளிக்கிழமை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொடிகாமம் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் வெள்ளாம்போக்கட்டியில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை வழிமறித்த குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், இளைஞனது வீட்டுக்கும் சென்று பெறுமதியான பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றையும் கொள்ளையிட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.