-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- ரொட்டவெவ பகுதியில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை குறித்த சந்தேக நபர்களை ஆஜர் படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த நவாஸ் ரஹ்மான் (23வயது) மற்றும் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த பைசர் ஹஸாத் (22வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளை சோதனை இட்டபோது 05 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 23ம் திகதி மொரவெவ விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கஞ்சா போதை பொருளை விற்பனைக்காக தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், குறித்த பெண் தொடர்பில் முன் குற்றங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
அத்துடன் மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.