குடும்ப சுமையால் ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டு வேலைக்கு சென்ற பெண் ஒருவர் வீட்டில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
மாதிரிகிரிய திவுலங்கடலைச் சேர்ந்த பி. தில்மி மதுபாஷினி குமாரி (வயது – 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட, இந்த பெண் வீட்டு வேலைக்காக சவுதிக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இவர் தனது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து தான் வேலை செய்யும் வீட்டில் உள்ள சாரதி பிரச்சினை செய்வதாகவும் மேலும், வன்புணர்வு செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பெண் வெளியூர் சென்ற நாளிலிருந்து வாரம் ஒருமுறை அல்லது இருமுறை உறவினர்களுடன் தொலைபேசியில் பேசும் போது வீட்டில் வேலை அதிகம் என்றும் ஒவ்வொரு முறையும் பேசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை என்றும் கணவர் கூறி உள்ளார்.
முதல் மாதத்தில் 78,000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அது குறைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டாவது மாதத்தில் 53,000 பின்னர் 20,000 கடந்த மாதம் 10,000 ஆக குறைக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரேயடியாக பணம் தருவதில்லை என்று அந்த பெண்மணி கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் அவருக்கு அழைப்பு வராததால், கணவர் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
அங்கு, ஒரு வாரத்திற்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.