– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022 ம் ஆண்டிற்கான 26 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா மற்றும் 42வது வருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக வாரம் நடத்தப்படவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டுக்கான 26வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் மற்றும் 8ம் தேதிகளில் கிழக்குப்பல்கலைக்கழக வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடத்தப்படவுள்ளது.
மூன்று அமர்வுகளாக இரண்டு நாட்களில் நடைபெற உள்ள இப் பொதுப்பட்டமளிப்பு விழாவில் 1649 உள்வாரி மாணவர்களும், 55 பட்டப்பின்படிப்பு மாணவர்களும், 56 வெளிவாரி மாணவர்களும் அடங்கலாக 1760 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மேலும் இலங்கை, மாலைத்தீவு மற்றும் தென் ஆசியாவிற்கு உரித்தான உலகவங்கியின் முன்னனி பொருளியலாளரும் மனித அபிவிருத்திக்கான தலைவருமான பேராசிரியர் ஹர்ஷ அத்துருபனே (Professor Harsha Aturupane ), இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலாப் எம்.எம்.பூ தாய்ர் ( Mr.Khalaf.M.M. Bu Dhhair ) மற்றும் பொதுநலவாய கல்விக்கான பிரதம நிறைவேற்று தலைவரான பேராசிரியர் ஆஸா எஸ்.கன்வார் (Professor Asha S.Kanwar) ஆகியோர் இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 42 வது வருட பூர்த்தியை முன்னிட்டு ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 8ம் திகதி 2023 வரையான காலப்பகுதியில் பல்வேறு நிகழ்வுடன் கூடிய பல்கலைக்கழக வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை விசேடமான முறையில் கொண்டாடுவதற்காக பல்கலைக்கழக சமூகம் ஒக்டோபர் 3ம் தேதியினை திறந்த நாளாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.