-கிண்ணியா நிருபர்-
கிண்ணியாவிலுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமாக கட்டிடமொன்று இன்மையினால் நீண்டகாலமாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றனர். தற்பொழுது நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்குறிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார சபைக்கு சொந்தமாக காணியின்மையினால் அக்கட்டிடத்தினை தம்பலகாமத்தில் அமைப்பதற்கும், கிண்ணியாவிலுள்ள மின்சார சபை அலுவலகத்தினை தம்பலகாமத்திற்கு கொண்டுசெல்வதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
எனவே, உடனடியாக கிண்ணியாவில் மின்சார சபைக்குப் பொருத்தமான, போதுமான அளவு காணியொன்றினை அடையாளப்படுத்தி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று புதன்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றபோதே இவ்வாறு பிரேரனையை முன்வைத்து உரையாற்றினார்.
தொடர்ந்தும் பல பிரேரனைகளை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்,
கிண்ணியா நகர சபையின் நிலப்பரப்பு சிறியதாக உள்ளதனாலும், நகர சபை எல்லைக்குள் அரச காணிகள் மிகக்குறைவாக காணப்படுவதினாலும், கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குள் வரும் உப்பாறு கிராம சேவகர் பிரிவினை கிண்ணியா நகர சபை எல்லைக்குள் உள்வாங்குவதற்கு கடந்த காலத்தில் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு சில முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட போதிலும் அது முழுமையடையவில்லை.
உப்பாறு கிராம சேவகர் பிரிவினை முழுமையாகவோ, பகுதியாகவோ கிண்ணியா நகர சபையுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் ,
கிண்ணியா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது, ஆனால் அவர்கள் பார்வையிடுவதற்கோ, பொழுதைக் கழிப்பதற்கோ உரிய இடங்கள் நமது பிரதேசத்தில் குறைவாகவுள்ளது.
எனவே, சுற்றுலாப்பயணிகளை கவருவதற்கு ஏற்ற வகையில் கிண்ணியா பாலத்திற்கு கீழுள்ள இடம், தோணா கோவிலடிக்கு முன்னாலுள்ள கடற்கரை, உப்பாறு பாலம் மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்கரை பகுதிகளை அழகுபடுத்தி, மின்விளக்குகள் பொறுத்தி சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது பகுதியில் சுற்றுலாப் பயணிகளினதும், போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்களினதும் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லுகின்றது, அவர்களின் இயற்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென பொதுமலசல கூடம், பொதுக் குளியலறை என்பன இல்லாதது பெருங்குறைபாடாகவுள்ளது.
எனவே, மட்டக்களப்பு வீதியில் சிறுவர் பூங்காவை அண்டிய பகுதியில் பொதுமலசல கூடம், பொதுக் குளியலறை என்பவற்றை அமைப்பதற்கு நகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நகரசபைக்கும் வருமானம் கிடைக்கும்.
கிண்ணியா சிறுவர் பூங்காவிலிருந்து தோணா கண்டலடியூற்று வரையிலுள்ள கரையோரப் பகுதியிலுள்ள கட்டிடங்களை அகற்றுமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பலர் வியாபார நிலையங்களை அமைத்து தமது வியாபாரங்களை மேற்கொள்ளுகின்றனர்.
எனவே, அவர்களின் வியாபார நடவடிக்கைகளை பாதிக்காத வகையில் இவ்வேலைத் திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன், என தெரிவித்தார்