யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் கோண்டாவில் உப்புமடம் சந்திப் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
தாவடியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான லோகராசா தர்சன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவினை சாரதி திடீரென திறந்த வேளைஇ வீதியால் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் கார் கதவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன் விபத்துக்கு காரணமான காரினை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது, உரிய விசாரணைகள் இடம்பெறாது சடலத்தை அப்புறப்படுத்தியதுடன் விபத்துக்கு காரணமான காரினை பொலிஸார் எடுத்துச் செல்வதை அனுமதிக்க முடியாது என விபத்து இடம்பெற்ற பகுதியில் கூடியவர்கள் பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
பின்னர் அங்கு கூடி இருந்தோரை பொலிஸார் அப்புறப்படுத்தி காரினை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அதேவேளை, காரின் சாரதி பொலிஸில் சரணடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.