கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல்போன ரி56 ரக துப்பாக்கி, மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பட்டபொல பிரதேசத்தில் வசிக்கும் கரந்தெனிய இராணுவ முகாமை சேர்ந்த 39 வயதான இராணுவ சிப்பாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து ரி56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான மெகசின்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த துப்பாக்கி சந்தேக நபரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் எதற்காக அதனை கொண்டு சென்றார், காணாமல் போன குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றங்களை புரிந்துள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.