– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை களுதாவளையில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னால் தமது முச்சக்கர வண்டிகளுடன்பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரதேசத்தில் இருந்து கொண்டு பிரதேச சபைக்கு வரியைச் செலுத்திக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் தமக்கு வெளி பிரதேசங்களிலிருந்து வரும் முச்சக்கர வண்டிகளால் பெரும் நட்டத்தை எதிர்கொள்வதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், போராடுவோம், போராடுவோம், நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுவோம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் பிரதேச சபையின் வாயிற்கதவை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர் உடன் கவனத்தில் எடுக்க வேண்டும், எமக்குரிய தீர்வை பெற்றுத்தர, மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் உங்கள் கவனத்திற்கு, கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு, உள்ளிட்ட வாசகங்களை எழுதியிருந்த பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டங்களில் 4 பேரையும் பிரதேச சபையின் செயலாளர் சா.அறிவழகன் அழைத்ததோடு, கடமையிலிருந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபயவிக்கிரமவுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கு ரெக்ஸ் வோட் பொருத்துதல், ஒற்றை நாட்கள். இரட்டை நாட்கள் என மாறி மாறி முச்சக்கர வண்டிகளை உரிய இடங்களில் தரித்து நிற்கச் செய்தல், பிரதேச சபையினால் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்ற்றிக்கர்களை ஒட்டுதல், மாதம் ஒருமுறை பொலிஸாருடன் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சந்திப்பை ஏற்படுத்தல், இதனை பொலிசாரும் பிரதேச சபையும், முச்சக்கர வண்டி ஓட்டுனர்களும் இணைந்து மேற்கொள்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.