2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.
குறித்த பரீட்சை எதிர்வரும் 31ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பன இணைந்து புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.
அதற்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறை தயாரிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் நிலவும் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, பசறை, பொலன்னறுவை, கெக்கிறாவ மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுமாயின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கோ தொடர்புக் கொண்டு அறிவிக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.