புலம்பெயர் தமிழர்கள் தமது தாய்மொழியை வளர்ப்பதற்காக சிறுகதைகளை எழுதி நூல்களை வெளியிடுவது சிறந்த விடயம் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கல்லாறு சதீஷ் எழுதிய “பனியும் தண்டனையும்” புலம் பெயர் சிறுகதை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மட்டு கோட்டைக்கல்லாறு மகா வித்யாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம் பெற்றபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது உலக நாடு முளுவதும் “கல்லாறு” என்ற தான் பிறந்த கிராமத்தையும் அறியும் படி செய்த இவர் தமிழ் இலக்கியவாதிகளில் முக்கியமான ஒருவர் என கூறினார்.
புலம்பெயர்ந்துவாழும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கிழக்கில் முதலீடுகளை செய்து கிழக்கு மாகாணத்தினை ஏனைய மாகாணங்களைப்போன்று வளப்படுத்துவதற்கு முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கிழக்கில் அதிகளவான வளர்ச்சிப்பணியை முன்னெடுக்குமாறு தனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியாவில் பதிப்பாளரும் திரைப்பட தயாரிப்பாளருமாக பணிபுரியும் மு.வேடியப்பன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்ததுடன் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நவநீதன், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்ணம், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர் சிறிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து, கல்லாறு சதீஷின் பெற்றோருக்கு முதலாவது நூல் பதிப்பு கல்லாறு சதீஷ் மற்றும் மு.வேடியப்பனால் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதை தொடர்ந்து நூலகர் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளுக்கும் நூல்பதிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வின்போது கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.






