முஸ்லிம் பிரமுகர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

-கல்முனை நிருபர்-

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்

பாவங்கள், தீயன விலக்கி நல்லமல்களினால் நாம் இறைவனுடன் தொடர்புபட்ட ஆயிரம் மாதங்களை விட சிறந்த மாதமான புனித ரமழானை அடைந்து இன்று நோன்புப்பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் சகலரும் தேக ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் வாழ இறைவன் துணைபுரிய பிராத்திக்கிறேன்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் தளம்பல்கள் காரணமாக பல்வேறு முரண்பாடுகளுடன் இந்த புனிதமிகு காலத்திலும் கஷ்டத்தை அனுபவிக்கும் எமது சகோதரர்களுக்கும் பல்வேறு காரணங்களினாலும் துயருற்றிருக்கும் அனைவருக்கும் இறைவன் நல்ல சுகத்தையும், பறக்கத்தையும் வழங்கிட எல்லோரும் கையேந்தி பிராத்திப்போம், என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே இந்த காலகட்டத்தில் ஒற்றுமை புரிந்துணர்வு நிலையாக ஏற்பட வேண்டும் எனவும் சகலருக்கும் நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை அமைய இத்திருநாளில் முஸ்லிம்கள் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் அல்லாஹ்வை முன்னிறுத்தி பல தியாகங்களைச் செய்து 30 நாட்கள் நோன்பிருந்து இன்று பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

நாடு வளர்ச்சியடைய வேண்டுமாயின் நிலையான சமாதானம் இருக்க வேண்டும். அதில் இன ஒற்றுமை என்பது விசேட அம்சமாகும். இஸ்லாம் சமாதானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்துகின்றது. அதற்கான நாளாக இன்றைய தினத்தை அமைத்துக் கொள்வோம். என்பதுடன் உலகை அச்சுறுத்தும் சகல தீங்குகளிலிருந்தும் எம்மை காக்க சகலரும் துஆ செய்வோம். நிலையானதும், ஸ்திரமானதுமான பொருளாதாரத்தை இலங்கை தேசம் அடைந்து முன்னேற்ற பாதைக்கு எமது நாட்டை கொண்டுசெல்ல இறைவனிடம் நாம் கையேந்தி பிராத்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் முஸ்தபா

பொருளாதாரம் கடுமையாக சீரழிந்து, நாட்டின் ஸ்திரத்தன்மை கடுமையாக தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இலங்கை வாழ் முஸ்லிங்கள் நாட்டின் மேம்பாட்டுக்காக புனிதமிகு இந்த பெருநாள் தினத்தில் பிரார்த்திக்க வேண்டும். தாய் தேசத்தின் மீட்சியிலையே எமது வெற்றி தங்கியுள்ளது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளருமான கலாநிதி அன்வர் முஸ்தபா விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மூலைமுடுக்குகள் தொடக்கம் தலைநகரம் வரை தனது அன்றாட வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் மக்கள் வீதிக்கு இறங்கி போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் சமூக ஒற்றுமை இனங்களுக்கிடையிலான பரஸ்பரம் துளிர்விட ஆரம்பித்துள்ளது. இந்த காலநேரத்தை சரியாக பயன்படுத்தி நாட்டை ஒழுங்கான பொருளாதார கொள்கையுடன் முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. அரசியல் கட்சிகளின் அரசியல் பழிவாங்கல்கள், புராதன அரசியல் முன்னெடுப்புக்களினால் சரிந்துள்ள இலங்கை மீள கட்டமைக்கவேண்டிய நேரத்தை அடைந்துள்ளது.

தாய்நாட்டின் சுபீட்சம் சிறந்தமுறையில் அமைய முஸ்லிங்கள் இந்த பெருநாள் தினத்தில் பிராத்திக்க வேண்டும். இன்று எமது நாட்டிலும், உலகம் பூராகவும் புனித நோன்புப்பெருநாளை கொண்டாடும் சகலருக்கும் என்னுடைய ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்

நாட்டில் புரையோடிப்போகியிருக்கும் பொருளாதார நெருக்கடிகளும், அரசியல் முரண்பாடுகளும் இல்லாதொழிந்து நிரந்தர நிம்மதி தலைத்தோங்கும் நாட்களாக இனிவரும் நாட்கள் மலர புனித மிகு நோன்புப் பெருநாள் காலத்தில் இறைவனின் உதவி வேண்டி பிராத்திக்கிறேன் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், 30 நாட்கள் இறைவனின் கட்டளையேற்று நோன்பிருந்து பல்வேறு இறைவழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனிடம் பிழை பொறுக்க மன்றாடி புனிதமிகு நோன்புப்பெருநாளை இன்று கொண்டாடும் எல்லா முஸ்லிம் உறவுகளுக்கும் என்னுடைய ஈத் முபாறக் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கையர்களின் விதி மாறி வீதியில் நிம்மதிக்காக கோஷமிட்டுக்கொண்டிருக்கும் இந்த பொழுதில் பெருநாளை சந்தித்திருக்கும் இலங்கையர்கள் விலைவாசியேற்றம், பொருட்களின் நெருக்கடிகள்,அரசியல் மாற்றங்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் என பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த சிக்கல்கள் இல்லாதொழிந்து நிம்மதியான வாழ்க்கையும், எமது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் உறுதியான அரசாங்கம் உருப்பெற வேண்டும் என்றும் இந்த நன்னாளில் பிராத்தித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மு.கா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நீங்கி – சகல சமூகங்களும் சுபீட்சமாக வாழ இப் புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம் என மு.கா பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார். புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

30 நாட்கள் நோன்பு நோற்று – அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெற்றுக் கொண்ட நாம் – அதே பாதையில் எமது எதிர்கால வாழ்க்கை முறையையும் நிலை நிறுத்திக்கொள்ள பிரார்த்திப்போம். கடந்த நோன்பும் பெருநாளும் எம்மை வீட்டோடு அமரச் செய்துவிட்டது. கொரோனா கொடூரம் அன்று போல் இன்றும் எம்மை வதைக்கின்ற இக்காலத்தில் அவற்றில் முழு உலக மக்களையும் பாதுகாக்கவும் அக் கொடிய நோயிலிருந்து உலகம் மீண்டெழவும் பிரார்த்திப்போம்.

இலங்கை – இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நெருக்கடி நீங்கி முழு மக்களும் சுபீட்சம் பெறவும் இன்றைய பெருநாள் தொழுகையில் இறைவனிடம் இரு கரம் ஏந்துவோம்.புனித நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.