ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகள் விசாரணையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்திற்கு விளக்கமளித்ததுடன், பிரேத பரிசோதனை தொடர்பான இரண்டு மேலதிக ஆவணங்கள் மற்றும் மேலதிக அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, கபில சந்திரசேனவின் உடலில் இருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை மேலதிக ஆய்வுகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசி ‘Face ID’ (முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம்) மூலம் பூட்டப்பட்டுள்ளதால், அதனைத் திறக்க அதிகாரிகளால் இதுவரை முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குறித்த சாதனத்தை அதன் உற்பத்தியாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பித் திறப்பதற்கு நீதவான் அனுமதி அளித்தார்.
மேலும், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கழுத்துப்பட்டி (Necktie) ஏற்கனவே வழக்கு ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதுவும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்படவுள்ளது.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மருந்துகள் மற்றும் அடையாளம் தெரியாத பொருட்கள் தொடர்பில் நீதவான் கேள்வி எழுப்பியபோது, அவை பிரேத பரிசோதனை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.
இந்த விசாரணை தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவியிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காக இந்த வழக்கு நாளை மறுதினம் (14) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.