கட்டுக்கடங்காத உழவுக் கூலியினால் அவதிப்படும் விவசாயிகள்

-கிளிநொச்சி நிருபர்-
இம்முறை  பெரும்போகச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பிப்பதில் பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளனர்.
தேவையான எரிபொருளை கமநல சேவைகள் திணைக்களத்தின் சிபாரிசுடன் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் உழவு இயந்திர உரிமையாளர்கள் ஏக்கருக்கு  மூன்று உழவுக்கான கூலியாக இருபதாயிரம் என விலை நிர்ணயம் செய்தமையினால்,  விவசாயிகள் ஒரு ஏக்கருக்கான செய்கையின் முடிவில் 32,000 ரூபா நட்டத்தை எதிர் நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகளதும்,  விவசாய சம்மேளனங்களினதும், கோரிக்கைக்கு அமைய தோப்பூர் கமநல சேவைகள் நிலையம் விவசாய சம்மேளனங்களுக்கும், உழவு இயந்திர உரிமையாளர்களுக்கும் இடையில் ஒரு பொது இணக்கப்பைட்டை ஏற்படுத்தி விலைக்குறைப்பை மேற்கொள்வதற்கு நேற்று செவ்வாய்கிழமை எடுத்த முயற்சி உழவு இயந்திர உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பினால் இணக்கப்பாடுகள் ஏதுமின்றி முடிவுக்கு வந்துள்ளது.
எவ்வாறாயினும், சம்மேளனங்கள் தமது நிர்வாக எல்லைக்குட்பட்ட விவசாயத்தரைகளை உழுவதற்கான கூலியினை நிர்ணயித்து உழவு வேலைகளை ஆரம்பிக்குமாறு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மூதூர் கிழக்கில் அநேகமான விவசாயக் நிலங்கள்  மழைநீரை மட்டும் நம்பியே பயிர் செய்யக்கூடிய  மணல் தரைகளாகக் காணப்படுகின்றன.
இதனை மூன்று தடவைகள் உழுவதற்கு 5 லீற்றர் டீசல் போதுமானது எனவும்,  எவ்வளவு தான் உழவு இயந்திர உபகரணங்களின் விலைகள் அதிகரித்தாலும் ஒரு  ஏக்கருக்கான உழவுக் கூலியாக எட்டாயிரம் ரூபா என்பதே அதிகம் என விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு, விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாதவண்ணம் விவசாயச் செய்கையில் ஈடுபட வழியேற்படுத்தாவிட்டால் தாம் விவசாயத்திலிருந்து ஒதுங்க வேண்டி நிலை  ஏற்படும்,  எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.