இங்கிலாந்தைச் சேர்ந்த நடாஷா விக்ஸ் என்பவர் பகுதிநேரமாக செய்து வரும் “கட்டிப்பிடி” வைத்தியத்தில் இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.
இந்த அசாதாரணமான தொழிலை 2014ஆம் ஆண்டு தொடங்கிய நடாஷா, இன்று நாடு விட்டு நாடு சென்று “கட்டிப்பிடி” வைத்தியம் செய்து வருகிறார். இவரது அமர்வுகளுக்கு எப்போதுமே கூட்டம் அலைமோதும். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை என பல்வேறு தரப்பினரும், பெல்ஜியம், அயர்லாந்து போன்ற பல நாடுகளில் இருந்தெல்லாம் இவரிடம் சிகிச்சை பெற வருகிறார்கள். ஒவ்வொரு அமர்வுக்கும் இலங்கை ரூபாய் மதிப்பில் 28,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கிறார்.
வழக்கத்திற்கு மாறான தொழிலாக இது இருந்தாலும், தனது “கட்டிப்பிடி” வைத்திய அமர்வுகளை தேர்ந்த தொழில்முறையோடு அணுகுகிறார் நடாஷா.
அவரை தேடி வருபவர்கள் சோஃபாவில் அமர்ந்திருக்கும் போது, அங்கு ஒரு இதமான சூழலை உருவாக்குகிறார். எல்லாவற்றையும் குணமாக்கும் சக்தி நிறைந்த நடாஷாவின் வெதுவெதுப்பான அணைப்பை அப்போது அவர்கள் உணர்கிறார்கள். உண்மையான அன்போடும், அக்கறையோடும் அவர் தழுவும் போது, அந்த அரவணைப்பில் ஒருசிலர் மெய்மறந்து தூங்கியும் விடுகிறார்கள்.
ஆறுதல் தேடி வரும் முதியவர்கள் முதல் துயரத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்கள் வரை என பல வகையான மனிதர்கள் நடாஷாவின் அணைப்பைத் தேடி வருகிறார்கள். ஒரு காலத்தில் பகுதி நேரமாக பார்த்து வந்த இந்த வேலைதான், அவருக்கு இப்போது கைநிறைய வருமானத்தை அளித்து வருகிறது. இதன் மூலம் தூய்மையான அன்பை பரப்புவதோடு தேவைப்படுவோருக்கு ஆறுதலும் அளித்து வருகிறார் நடாஷா.