முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வருகை இன்னும் இரண்டு வாரங்கள் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி நாளை நாடு திரும்ப தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன
எவ்வாறாயினும், தீர்க்கப்பட வேண்டிய சில பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக அவரது வருகை இன்னும் இரண்டு வாரங்களுக்கு தாமதமாகலாம் என்று குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை நாடு திரும்புவது புலனாய்வுப் பிரிவினரின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் நிச்சயமாக திரும்பி வர விரும்புகிறார். ஆனால் பாதுகாப்பு தான் முக்கிய பிரச்சினை. அவரது பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை விரைவாக செய்ய முடிந்தால், அவர் இரண்டு வாரங்களில் அல்லது அதற்கு முன்னதாக திரும்பி வரலாம், என அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அவர் தாய்லாந்தில் தங்கியிருப்பதற்காக பாரியளவிலான பணம் செலவழிக்க வேண்டியுள்ளமையும் அவர் இலங்கை வருவதற்கு விரைவுபடுத்த ஒரு காரணமாக இருந்ததாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் ஜெட் விமானம், சொகுசு ஹோட்டல்கள் மற்றும் 24 மணி நேர பாதுகாப்புக்கான செலவுகள் அடங்கிய அவரது தாய்லாந்து செலவு இப்போது கோடிக்கணக்கான ரூபாய்களைத் தாண்டியுள்ளது, என அந்த வட்டாரம் தெரிவித்தது.
அந்த செலவை இனி தாங்குவது கடினமாகி வருகிறது, என முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் தங்கியிருப்பதற்கான செலவுகளை அவரது ஆதரவாளர்கள் சிலரே ஏற்றுக்கொள்வதாக ரொய்ட்டர்ஸ் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவரை விரைவில் நாடு திரும்புவதற்கு வசதி செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம், என சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் ரொய்ட்டர்ஸ் செய்தியிடம், கோட்டாபய ராஜபக்சவின் மீள்வருகைக்கான திட்டங்கள் எதுவும் தனக்குத் தெரியாது, என்று தெரிவித்திருந்தார். .
நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு பிரிவு மற்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆகியவை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளன.