கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 9.90 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், இந்த வருடம் ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 124,551 ஆகக் குறைவடைந்துள்ளது.
இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த மாதத்தில் இந்தியாவில் இருந்து 43,423 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையில் 35 சதவீதமாகும்.
இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து 10,474 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவில் இருந்து 8,710 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை இலங்கை தவறவிட்டிருந்த நிலையில், இந்த வருடத்தில் (2026) 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பாரிய இலக்கொன்றை இலங்கை நிர்ணயித்துள்ளது.
எனினும்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதியில் மாத்திரம் இதுவரை 1,146,573 சுற்றுலாப் பயணிகள் தீவுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.