-திருகோணமலை நிருபர்-
கிண்ணியா கச்சக்கொடிதீவு விளையாட்டு மைதான காணியில் விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக குறித்த பிரதேசத்தில் வாழும் தனி நபர் ஒருவரால் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் இன்று புதன் கிழமை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அமுலில் இருந்த கட்டாணையும் நீக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா கச்சக்கொடிதீவு பிரதேசத்தில் நீண்ட காலமாக மக்களால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணி தனக்கு சொந்தமான ஒரு தனியார் காணி என குறித்த பிரதேசத்தை சேர்ந்த தனி நபர் ஒருவரால் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கிலே ஆரம்ப கட்டமாக குறித்த காணிக்குள் உள்நுழைந்து விளையாட்டு நடவடிக்கைகள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கட்டாணையொன்று ஹீரோ விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கு எதிராக 2024.07.30 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது.
குறித்த வழக்கிலே எதிராளியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஹீரோ விளையாட்டுக்கழக செயலாளர் சார்பில் சட்டத்தரணி நளீஜ் அப்துல் சலாம் அவர்களின் அனுசரணையுடன் சட்டத்தரணிகளான றிஸ்வான் முகமட், எம்.எச்.எம் ராபி மற்றும் நிகால் சத்தார் ஆகியோர் தெரிபட்டனர்.
குறித்த காணியில் ஹீரோ விளையாட்டுக்கழகம் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடை செய்யக் கூடாது என்றும் வழக்காளி கோரிய இடைக்கால தடையுத்தரவு வழங்கப்பட கூடாதென்றும் விளையாட்டுக்கழகம் சார்பாக சட்டத்தரணி நளீஜ் அப்துல் சலாம் அவர்களின் அனுசரணையுடன் நீதிமன்றத்தில் தோன்றிய சட்டத்தரணிகளால் சமர்பிக்கபட்ட ஆட்சேபனை மற்றும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் என்பவற்றையும் வழக்காளி சார்பிலான சமர்ப்பனங்களையும் கருத்தில்கொண்ட நீதிமன்றம் குறித்த வழக்கினை இன்றைய இடைக்கால தடையுத்தரவு தொடர்பான கட்டளைக்காக நியமித்திந்தது.
இந்த நிலையிலே இன்றைய தினம் குறித்த காணிக்குள் விளையாட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை அமுலில் இருந்த கட்டாணையும் நீக்கப்பட்டுள்ளது.