திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் நேற்றிரவு வெருகல் வீதித்தடையில் மேற்கொண்ட சோதனையின் போது குளிரூட்டப்பட்ட லொறியில் இருந்து 50 கிராம் 220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கழுவாஞ்சிக்குடியிலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரத்திற்கு மீன்களை எடுத்துச் சென்ற குளிரூட்டி லொறியிலிருந்தே இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈச்சிலம்பற்று பொலிஸாருடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இவ்வாறு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் குளிரூட்டி வாகனமும் மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.