சமனலாவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயப் பணிகளுக்காக நீர் திறந்துவிடப்பட்டால், அன்றைய தினம் முதல் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
எனினும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியும் என அவர் கூறியுள்ளார்.
அதன்படி காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்பதுடன் மின்வெட்டு இன்றி திறந்துவிடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்து திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்தி விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.