ரஷ்யாவைச் சேர்ந்த நபர் தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்து விபரீத முயற்சியைச் செய்து மிக மோசமான நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நோவோசிபிர்ஸ்க் நகரைச் சேர்ந்த மிகைல் ரதுகா (வயது – 40) என்று அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நபர் தனது கனவுகளைக் கட்டுப்படுத்த நினைத்த அவர் இதற்காக மண்டை ஒட்டை துளையிட்டு உள்ளே சிப் வைக்க முயன்றுள்ளார்.
ட்விட்டரில் இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் ஒரு டிரில்லிங் இயந்திரம் வாங்கினேன், என் தலையைத் துளையிட்டு, என் மூளையில் ஒரு சிப்பை பொருத்தினேன், இருப்பினும் இதனால் எனக்கு மிகப் பெரியளவில் ரத்த இழப்பு ஏற்பட்டது. இதனால் நான் உயிரிழக்கும் சூழலுக்கும் கூட தள்ளப்பட்டேன்.எனினும் எனது ஆப்ரேஷன் வெற்றிகரமாகவே இருந்தது. கனவுகளைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை இது திறந்துள்ளது. கடந்த மே 17ஆம் திகதி நானே எனக்கு இந்த ஆப்ரேஷனை செய்து கொண்டேன். மூளையைத் துளையிட்டு உள்ளே எலக்ட்ரோடு பொருத்தினேன். கனவுகள் வரும் போது அதை முறையாகச் சோதனை செய்ய எனக்கு இது தேவைப்பட்டது” என்றார்.
மேலும் ஓராண்டாக இது குறித்து தீவிரமாக யோசித்த இவர் கடந்த ஜூன் மாதம் தான் முதலில் தன்னை வைத்தே இந்த சோதனையைச் செய்யலாம் என அவர் முடிவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் இதற்காக நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநரிடம் செல்ல அவர் யோசித்துள்ளார். இருப்பினும், இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மறுப்பார்கள். அப்படிச் செய்தாலும் மருத்துவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும் என்பதால் அவரே ஆப்ரேஷனும் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
நான்கு மணி நேரம் அவர் இந்த ஆப்ரேஷனை அவருக்கே செய்துள்ளார். இதில் ஒரு லிட்டர் ரத்தத்தை அவர் இழந்துள்ளார். இதன் காரணமாக அவரது உடல் மிக மோசமான நிலைக்க சென்றுள்ளது. அதன் பின்னரே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார்.