எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ : கடலை சுத்தப்படுத்த 90 கோடி செலவு

கடந்த ஜூன் மாதம் 2ஆம் திகதி தீப்பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை-கிரிந்த வரையான கடற்கரையை சுத்தப்படுத்த 903,857,293 (90கோடி) ரூபா செலவிடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அந்த நிலையில், கப்பல் விபத்துக்களை கையாள்வதில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், அதற்கான புதிய சட்டங்களை உருவாக்குமாறு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்தார்.

கப்பல் விபத்துக்குள்ளான கப்பலின் கொள்கலன்களில் இருந்து வெளியாகும் பிளாஸ்டிக் மற்றும் இரசாயனங்களை அகற்றி நாட்டின் கரையோரத்தை முற்றாக சுத்தப்படுத்த இன்னும் பல வருடங்கள் ஆகும் என கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்து வெளியிடப்பட்ட சுமார் 1,600 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் மற்றும் இரசாயனங்கள் பமுனுகம பகுதியில் உள்ள வாடகைக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேலும் தெரிவித்தார்.