பல்கலைக்கழக மாணவி ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை உடுவெல பிரதேசத்தை சேர்ந்த சந்துனி ஹன்சமலி பண்டார (வயது 22) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது தாயுடன் வசித்து வந்த நிலையில் இவரது தந்தை வேலை நிமித்தம் வெளிநாட்டில் வசிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த அன்று அறைக்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் உறங்கிக்கொண்டிருந்த மகளை அவதானித்த தாய் , எழுப்ப முயற்சித்த போது மகள் மூச்சுப்பேச்சு இன்றி இருந்துள்ளார்.
இந்நிலையில், அயவர்களின் உதவியுடன் மகளை மொனராகலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகளை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தனது மகள் அடிக்கடி சளிக்கு சிகிச்சை பெறுவதாகவும் வேறு எந்தவித சுகயீனமும் தனது மகளுக்கு இல்லை எனவும் அவரது தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி இரண்டு நாட்களில் பல்கலைக்கழகத்திற்கு செல்ல இருந்தமையால் தேவையான உடைகள் மற்றும் பொருட்களை ஆசையாக வாங்கி ஆயத்தம் செய்துள்ளார்.
அவர் தனது தாயிடம் தான் பல்கலைக்கழகம் செல்லும் நாளில் அழுதால் தாயை தனியாக விட்டு செல்ல மாட்டேன் எனவும் விரைவில் ஆசிரியராகி தாயை கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதோடு, மூளையில் இரத்தம் உறைந்தமையே மரணத்திற்கான காரணம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.